புதுக்கோட்டை மாவட்டத்தின் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிதாக பயிரிடப்பட்ட தைல மர தோட்டங்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், "தைல மரக்கன்றுகள் குறித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக மனு அளித்தது தொடர்பாக தமிழக முதலமைச்சரிடம் தெரிவிக்கப்படும். அம்மரத்தால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். குரங்கனியில் ஏற்பட்ட காட்டுதீ போல் இனி எந்த ஒரு இடத்திலும் நடைபெறாமல் இருக்கவும், அதில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "ஜெயலலிதா இருந்த காலத்தில் கட்சி தலைமை எப்படி இருந்ததோ அதே ஒற்றுமையுடன், தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ராஜன் செல்லப்பா எதை வைத்து பேசினார் என்பது தொடர்பாக அவரிடம் தான் கேட்க வேண்டும். இரு தலைமையாக இருந்தாலும் எவ்வித கசப்பும் இல்லாமல் ஒற்றுமையாக இருக்கிறோம்" என்றார்.