புதுக்கோட்டை: கோட்டைப்பட்டினத்திலிருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் அக்டோபர் 18ஆம் தேதியன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சுரேஷ் (39) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை தங்களது ரோந்து கப்பல் மூலம் மோதி உடைத்துள்ளனர்.
இதில் விசைப்படகு சேதமடைந்த நிலையில் கடலில் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. படகு கடலில் மூழ்கியதை அடுத்து அதில் சென்ற மூன்று மீனவர்களில் ராஜ்கிரண் (30) என்ற மீனவர் கடலில் மாயமாகியுள்ளார்.
மீனவர் மாயம்
மேலும் கடலில் தத்தளித்த மீனவர்கள் சுகந்தன் (23), சேவியர் (32) ஆகியோரை இலங்கை கடற் படையினர் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்களை இலங்கையில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் விசைப்படகை இலங்கை கடற்படையினர் தாக்கி மூழ்கடித்ததில் மீனவர் ஒருவர் மாயமான சம்பவம் மீனவ கிராமத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சவுதியில் உயிரிழந்த கணவர் - உடலை மீட்டுத்தரக்கோரி மனைவி கண்ணீர்