புதுக்கோட்டை மாவட்ட டெல்டா விவசாயிகள், விவசாயம் செய்வதற்குத் தேவையான அனைத்தும் இருந்தும் கூட யூரியா உரத் தட்டுப்பாட்டால் விவசாயம் பாதிப்படைவதாக தெரிவிக்கின்றனர்.
தற்போது பருவமழை ஓரளவிற்கு பெய்திருப்பதால் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி ஆகிய ஊர்களில் விவசாயம் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். இருந்தாலும், யூரியா உரத்தட்டுப்பாட்டால் விவசாயம் பாதிப்படைகிறது என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தெரிவித்ததாவது, 'பருவ மழை எங்களுக்குச் சரியான நேரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் பெய்தும், அணையில் இருந்து வரக்கூடிய காவிரி நீரும் எங்களுக்குப் போதுமான அளவில் கிடைத்திருந்தும் விவசாயத்திற்கு முக்கியத் தேவையான யூரியா உரம் சரிவர கிடைக்கவில்லை.
அரசால் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் யூரியா உரம் மொத்தத்தையும் தனியார் உரக்கடைகள் வாங்கிச் செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல், அரசு நிர்ணயிக்கும் யூரியா உரத்தின் விலையை விட தனியார் உரக் கடைகளில் அதிக விலைக்கு விற்கிறார்கள்.
இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள், தனியார் உரக்கடைகளில் சோதனையிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிர்ணயிக்கும் விலையில் எங்களுக்கு உரம் வழங்கிட வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : நாற்று நடவு செய்த பள்ளி மாணவ. மாணவிகள்!