புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம் (71). இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு நெடுவாசல் வடக்கு கிராமத்தில் உள்ளது.
இன்று அவரது தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணி நடைபெற்றுவந்த நிலையில் தோட்டத்தைப் பார்க்க ஆறுமுகம் அங்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு தென்னை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் (விஷ வண்டுகள்) திடீரென நூற்றுக்கணக்கில் பறந்துவந்து ஆறுமுகத்தைக் கடித்துள்ளன.
மேலும் அங்கே தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களையும் விஷ வண்டுகள் கடித்ததால் அவர்களும் அங்கிருந்து சிதறி ஓடியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் உடனே அங்கு வந்து ஆறுமுகத்தை மீட்டு பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே விவசாயி ஆறுமுகம் உயிரிழந்தார். மேலும் தொழிலாளர்கள் ஆறு பேர் நெடுவாசல் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சைப் பெற்றனர்.
சம்பவம் குறித்து வருவாய்த் துறை அலுவலர்கள் விசாரணை செய்துவருகின்றனர். மேலும் விஷ வண்டுகளை விரட்ட நெடுவாசல் கிராம மக்கள் சார்பில் கீரமங்கலம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.