புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வாண்டான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு, செப்.13 ஆம் தேதியன்று ஏற்பட்ட சாலை விபத்தில், முக எலும்புகள், நெஞ்சக எலும்புகள் முறிவுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், அவருக்கு சிறப்பான சிகிச்சையளித்து அவரது உயிரை காப்பாற்றினர். மேலும், முகத்தை பழைய நிலைக்கு சீரமைத்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையின் மூலம் பல்வேறு நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். குறிப்பாக இத்தகைய கரோனா ஊரடங்கு காலக்கட்டத்திலும் வழக்கமான அனைத்து பிற நோய்களுக்கும் தொடர்ந்து உயர்தர சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்குப் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருவதுடன், பல்வேறு புதிய மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சாலை விபத்தில் முக எலும்புகள் , நெஞ்சக எலும்புகள் முறிவுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவ குழுவிற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
விபத்தில் காயமுற்ற பரமசிவத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்டது குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.பூபதி, “இந்த விபத்தில் பரமசிவத்தின் முக எலும்புகள் கடுமையாக சிதைவுற்று, பற்கள் நேர்த்தியாக இல்லாத காரணத்தால் நீர் அருந்தவோ, உணவு உண்ணவோ முடியவில்லை. மேலும், வாய் திறக்கவோ, சரியாக பேசவோ முடியாது. இதன்பின் இவருக்கு பல்வேறு பரிசோதனை செய்து அதிக ரத்த சர்க்கரை அளவை இன்சுலின் மூலம் குறைத்து, முக சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.
இதில் முதற்கட்டமாக மூன்றாக உடைந்த மேல்தாடை எலும்பை கம்பிகள் கொண்டு கட்டி ஒன்றாக்கி, அதனை கன்ன எலும்பு வளைவுடன் தொங்கு கம்பிகள் மூலம் இணைத்து பற்கள் கட்டி வைக்கப்பட்டது. மேலும் இரண்டாம் கட்டமாக உடைந்த மேல்தாடை முகப்பை தொங்கு கம்பிகள் மூலம் நாசியின் பக்கவாட்டு எலும்புகளுடன் கட்டப்பட்டு பழைய முக அமைப்பு கொண்டுவரப்பட்டது. தற்போது இவரால் நீர் அருந்துவதும், உணவுகளை கடித்தும் சாப்பிட முடியும்.தற்போது அவருடைய முகம் பழைய பொலிவுடன் காணப்படுகிறது. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் குழு சாதனை புரிந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
விபத்தில் காயம் அடைந்து சிகிச்சைக்குப் பின் குணமடைந்த பரமசிவம் கூறியதாவது, “ சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து, எனது முகம், நெஞ்சக எலும்புகள் முறிவுடன் மிகவும் ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தேன். அரசு மருத்துவர்கள் மிகவும் திறம்பட செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து என்னுடைய முகத்தை பழைய நிலைக்கு குறுகிய நாள்களிலேயே சீரமைத்து விட்டார்கள்.
இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் அதிக செலவாகும். என்னைப்போன்ற கூலி வேலை செய்துவருபவர்களுக்கும் உயர்தரமான மருத்துவ சிகிச்சையளித்து குணப்படுத்தி வாழ வைத்த மருத்துவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை; சென்னை மருத்துவர்கள் சாதனை!