உழவர்களிடமிருந்து பாரம்பரியமிக்க இயற்கை வேளாண் விளைப் பொருட்களை பொதுமக்கள் வாங்கிப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரம்பரிய உற்பத்திப் பொருட்கள் விற்பனை அரங்கினை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியினை தொடங்கிவைத்து அவர் பேசுகையில்,
'புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட விவசாயப் பொருட்கள் விற்பனை அரங்கு இன்று (ஜூன் 10) தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மேம்படுத்திட மதிப்புக் கூட்டப்பட்ட விவசாயப் பொருட்களை விற்பனை செய்யும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிறுவனம் ஆயிரம் விவசாய உறுப்பினர்களைக் கொண்டு இயங்கிவருகிறது.
மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இயந்திரங்கள் கொள்முதல் செய்திட நிதி உதவி வழங்கப்பட்டுவருகிறது. இத்தகைய நிதி உதவி பெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் விளைபொருட்கள் விற்பனைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைபுரியும் பொதுமக்கள் தெரிந்துகொண்டு பயனடைய தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதில் பாரம்பரிய அரிசி வகைகள், மதிப்புக்கூட்டப்பட்ட சிறுதானிய பயிறு, 102 வகையான மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் நமது பாரம்பரியமிக்க இயற்கை வேளாண் விளைப் பொருட்களை வாங்கிப் பயன் அடைய வேண்டும்' என்று தெரிவித்தார்.