புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே உள்ள வேங்கை வயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத நபர்களால் மலம் கழிக்கப்பட்டதால், சிறுவர்களுக்கு நேற்றைய தினம் உடல்நிலை உபாதை ஏற்பட்டது. இதனை அடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குடிநீர் பிரச்னை காரணமாகவே குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோருக்குத் தகவல் அளிக்கப்பட்டு 10ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியினை ஆய்வு செய்தபோது நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கழிக்கப்பட்டு இருந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஊர் பொதுமக்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இத்தகைய விஷமச் செயல்களில் ஈடுபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதுமட்டுமின்றி கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரைக்கும், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கும் இதுதொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று மருத்துவ முகாம் ஒன்றை அந்தப் பகுதியில் அமைத்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அந்த ஊர்ப் பகுதியில் மக்கள் தங்களை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
பின்னர் உடனடியாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அந்தப் பகுதி மக்களை அழைத்துக் கொண்டு கோயிலின் கதவை உடனடியாக திறக்க வேண்டும் என்றும்; அனைவரும் தரிசனம் செய்ய வேண்டும் என்றும் ஒரு கட்டளையை விதித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை ஏற்படுத்தியுள்ளது. வருங்காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்ற வாக்குறுதியினை மாவட்ட ஆட்சியர் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை; மா.செ. கூட்டத்தில் எதிர்ப்புக் குரல்