புதுக்கோட்டை மாவட்டம், காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மைக்கேல் வில்லியம்ஸ் (18). இவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 62 முறை டயாலிசிஸ் செய்துள்ள அவர் அதற்கென 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.
அவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மதுரை மருத்துவமனையில் அவருக்கு டயாலிசிஸ் செய்ய மறுத்து அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். இளைஞர் புதுக்கோட்டை மாவட்டம் என்பதனால் ராணியார் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
இம்மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆகையால் இவர் ஜூன் 27ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
இதுபற்றி மருத்துவமனை முதல்வர். டாக்டர். மீனாட்சி சுந்தரம் கூறியதாவது, கரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக டயாலிசிஸ் சிகிச்சை இங்கு மருத்துவமனையில் செய்யப்படுகிறது.
அந்த வகையில் பத்து நாட்களில் இருமுறை டயாலிசிஸ் சிகிச்சை அளித்து மருத்துவர்கள் இந்த இளம் வயது மாணவனை காப்பாற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து டயாலிசிஸ் செய்யப்பட்டு, கரோனா தொற்றுக்கும் சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முதல் நபர் இவர்தான்.
ராணியார் மருத்துவமனையின் தூய்மையையும் இங்கு இருக்கும் கவனிப்பையும் அனைத்து துறையினரும் பாராட்டுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
மைக்கேல் வில்லியம்ஸ் பேசும்போது, 'நான் பயத்துடன் தான் மருத்துவமனைக்கு வந்தேன். ஆனால் தனியார் மருத்துவமனைகளை விட, அரசு மருத்துவமனையை தூய்மையாக பராமரித்துவருகின்றனர்.
மதுரை மருத்துவமனையை விட இந்த மருத்துவமனையின் கட்டமைப்பும் மருத்துவர்கள், செவிலியர்களின் கனிவான உபசரிப்பும் என்னை வெகுவாக கவர்ந்தன.
குறிப்பாக கழிப்பறைகள் மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து நோயாளிகளுக்கும் ஒரு நிம்மதியை தருகிறது என்று குறிப்பிட்டார்.