இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் பிரதமர் மோடிதான் காரணம் என கூறலாம். புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என பிரதமருக்கு தெரியும். ஆனாலும் அதுகுறித்து கவலை இல்லாமல் தற்போது இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகிற 12ஆம் தேதி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தவிருக்கிறோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 இடங்களில் போராட்டம் நடக்கும். இந்தப் போராட்டத்தில் கூட்டணி கட்சிகள் பங்குபெறாது. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மட்டுமே நடக்கும். பஞ்சாப்பில் விவசாயிகள் இந்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்களுக்கு பஞ்சாப் அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து கைகோர்த்து நிற்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தப்போனால் முதலில் கைது செய்வதற்கு தமிழ்நாடு அரசு வந்து நிற்கிறது. உத்தரப் பிரதேசத்தில் நடந்த தலித் பெண்ணுக்கு எதிரான வன்முறை என்பது மிகக் கொடூரமானது. அப்பெண்ணின் பெற்றோர் அனுமதியின்றி காவல்துறையினர் அப்பெண்ணின் உடலை எரித்தது கடும் கண்டனத்திற்குரியது.
மத்திய அரசு இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க உடனடி சட்டத்தை இயற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இல்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கும்.
மேலும், அப்பெண்ணின் குடும்பத்தை சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை காவலர்கள் உள்ளே விடாமல் தள்ளிவிட்டது கண்டனத்திற்குரியது. நம் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சாட்சி ஆதாரம் ஏதுமில்லை என குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பது சரியான நடவடிக்கை இல்லை.
பாபர் மசூதி இடிப்பு பிரச்னை மதம் சார்ந்த பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த நாட்டின் பிரச்னை. இதில், உச்ச நீதிமன்றம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டது ஏற்க முடியாது. கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது மிகத் தவறான செயல்" என்றார்.
இதையும் படிங்க: கால்நடைகளிடம் மனு அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்