கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளிய செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொண்டு, தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டையில் உள்ள பேருந்து நிலையத்தில் இயங்கும் காய்கறி சந்தையினை அம்மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் பேசிய அவர் கூறியதாவது, 'புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்.
கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக, புதுக்கோட்டை மாவட்டம் திகழ அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் கரோனா வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்கிச் செல்ல தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும் காய்கறி சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளபட்டது. இந்த ஆய்வின்போது காய்கறிகள் உரிய விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பது குறித்தும், முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறதா என்பதை உறுதி செய்யும் வகையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களின் நலனுக்காக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கேட்டுக்கொண்டார்.
இதையும் பார்க்க: ஊரடங்கால் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம்: புலம்பும் மெக்கானிக்குகள்