புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் வாழும் பெண்கள் தூய்மைக் காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள மங்கதேவன்பட்டி, மான்சன் விடுதி, பாலக்குறிச்சி, மாங்குடி, முக்குடி, ராஜேந்திரபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படாததால் வாழ்வு ஆதாரம் பாதிக்கப்படுவதாக கவலையுடன் தெரிவித்தனர்.
இவர்களுக்கு மாத ஊதியமாக இரண்டாயிரத்து 500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. நாள்தோறும் சிரமப்பட்டு செய்யும் வேலைக்கு மிகக் குறைவான சம்பளம் கொடுக்கப்படுவது கவலையளிக்கிறது. இருந்தும் கடந்த 10 மாதங்களாக சம்பளம் வரவில்லை என தூய்மைப் பணியில் ஈடுபடும் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்த பெண்கள் கூறியதாவது, "நாள்தோறும் மிகவும் கடினமான வேலையைப் பார்க்கிறோம். எங்களுக்கு மாதம் இரண்டாயிரத்து 500 ரூபாய் சம்பளம் என்றனர். அந்த சம்பளத்தில் பிடித்தம் எடுத்துக்கொண்டு குறைவான பணத்தைத் தான் தருகிறார்கள். வியர்வை சிந்தி உழைத்த, காசை கேட்டால் நகராட்சி நிர்வாகம் தர மறுக்கிறது.
நாங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்த பிரச்னையை முன்னெடுக்க சிஐடியு-வினர் உதவி செய்தனர். விரைவில் இதற்கான நடவடிக்கையை எடுத்து ஊதியத்தை வழங்க வேண்டும். இல்லையென்றால் வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபடுவோம்' என எச்சரித்தனர்.
இதையும் படிங்க: 'இறந்தது மஞ்சள் காமாலையில்; பரப்பியது கொரோனா என...' தனியார் தொலைக்காட்சி மீது குற்றச்சாட்டு