புதுக்கோட்டை : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல், கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (ஆக.19) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிக் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
13 லட்சம் பேர் நீக்கம்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ”கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 31 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். தற்போது 18 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 13 லட்சம் பேர் வாரியத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகளால் நலவாரிய உறுப்பினர்கள் அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் இருந்து வந்தனர். தற்போது,50 நாள்களில் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஆன்லைன் பதிவு முறையில் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் உள்ளது. அதனை எளிமைப்படுத்துவதற்கு முயற்சி நடைபெறுகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு 25 ஆயிரம் வீடுகள் கட்டித்தரும் திட்டம் தொடங்கப்படவுள்ளது
மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி
தொழிலாளர்கள் நலத்துறை மானியக் கோரிக்கையின்போது கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மூன்று லட்சம் பேருக்கு தற்போதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
நலவாரிய உறுப்பினர் சேர்வதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் பணி சான்று பெற வேண்டும். ஆனால் 95 விழுக்காடு கிராம நிர்வாக அலுவலர்கள் பணி சான்று வழங்க மறுக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் கிராம நிர்வாக அலுவலரின் சான்றுகள் தடையில்லாமல் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகைய முறையை ஒழிப்பதற்குதான் ஆன்லைனில் எளிமையாக பதிவு புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்வதற்கு நல வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு அரசு எந்த கட்டணமும் வசூல் செய்வது கிடையாது. ஆனால் பல தொழிற்சங்கங்கள் உறுப்பினராக சேர்ப்பதற்கு அதிக அளவு பணம் வசூல் செய்கின்றனர். தொழிற்சங்கங்கள் இதனை முறைப்படுத்த வேண்டும்.
நலத்திட்ட உதவிகள்
வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து இங்கு கட்டுமான தொழிலுக்கு வரும் தொழிலாளர்கள் கண்டிப்பாக தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் பதிவு செய்தால் அவர்களுக்கு அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் கிடைக்கும்.
இருப்பினும் இவர்கள் மீண்டும் புலம்பெயர்ந்து தங்களுடைய மாநிலத்திற்கு சென்றால் அங்கு அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பது கிடையாது. இதனை தவிர்க்கும் நோக்கத்தில் தான் புலம்பெயர்ந்தவர்களுக்கான பிரத்தேக அட்டை (யூனிக் கார்டு) வழங்குவதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
ஒன்றிய அரசு உதவியோடு இவர்களுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கான பிரத்தேக அட்டை (யூனிக் கார்டு) வழங்கப்பட்டால் அவர்கள் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் நலத்திட்ட உதவிகளை பெற முடியும். இது அரசின் பரிசீலனையில் உள்ளது” என்றார்.