புதுக்கோட்டை மாவட்டம் எழில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (57). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வமணி (48).
ரங்கநாதனின் மனைவி வெளியூர் சென்றுள்ள நிலையில், ரங்கநாதனும் நேற்றிரவு பணிக்குச் சென்றிருந்தார். இதனை பயன்படுத்திக்கொண்ட திருட்டு கும்பல், ரங்கநாதன் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த இரண்டு கிலோ வெள்ளி, 40 சவரன் நகைகள், நான்கு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.
பின்பு, பணி முடிந்து வீடு திரும்பிய ரங்கநாதன், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை திருடுபோயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து அறந்தாங்கி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். பின்னர், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராவின் மூலம் அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகைகள், ரூ. 10 லட்சம் பணம் கொள்ளை