தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டதுதான் மொய்விருந்து நிகழ்ச்சிகள். இது தற்போது மெல்ல மெல்ல வளர்ந்து புதுகோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பரவி வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் வடகாடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மொய்விருந்து நடத்த திட்டமிட்டார். இந்த மொய்விருந்திற்காக அவர் 50 ஆயிரம் பத்திரிகைகள் அடித்து விநியோகம் செய்தார். ஆயிரம் கிலோ ஆட்டுக்கறியுடன் சமைக்கப்பட்ட இந்த மொய் விருந்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணமூர்த்தி கடந்த நான்கு ஆண்டுகளாக ரூ. 3 கோடிக்கும் மேலாக மொய் செய்த நிலையில், இந்த விருந்தில் அவருக்கு ரூ. 4கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதனை வைத்துக் கொண்டு தனது வியாபாரத்தை விருத்தி செய்யப்போவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்தாண்டு வரை விழாவில் விருந்து உண்பவர்களுக்கு தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தாண்டு முதல் நெகிழி பொருட்களுக்கு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, விருந்தினர்களுக்கு பழங்கால முறைப்படி குவளைகளில் தண்ணீர் வழங்கினர். அதேபோல் விழா நடைபெறும் பந்தலில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும் ஐடிபிஐ வங்கி ஸ்டால் அமைத்து மொய்யை வரவு வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். சென்ற ஆண்டு நடத்தப்பட்ட மொய்விருந்துகளில் ரூ.500 கோடி வரை வசூலான நிலையில், இந்த ஆண்டு கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் ரூ.250 கோடி முதல் ரூ.300 வரைதான் வசூலாகும் என கூறப்படுகிறது.