புதுக்கோட்டை: கீரனூரில் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஐந்து சவரனுக்கு குறைவான நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
இந்த நிலையில், பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பிற மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
நகைக்கடன் முறைகேடு
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் தஞ்சாவூர் மண்டல ஆய்வுக் குழு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வுமேற்கொண்டனர்.
அப்போது அங்கு மொத்தம் இருந்த 934 பேருக்கு நகைக்கடன் வழங்கப்பட்டிருந்ததில் 832 நகைப் பொட்டலங்களில் மட்டுமே நகை இருந்ததும் 102 பொட்டலங்களை நகை இல்லாமல் போலியாக நகைக்கடன் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும் இதில் அந்த வங்கியின் செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல், நகை மதிப்பீட்டாளர் கனகவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து அவர்களது உறவினர்களின் பெயரில் ஒரு கோடியே எட்டு லட்சத்து 17 ஆயித்து 500 ரூபாய் முறைகேடாக நகைக் கடன் வழங்கியிருப்பது தெரியவந்தது.
நகை மோசடியில் வங்கியின் தலைவர்?
இதனையடுத்து நீலகண்டன், சக்திவேல் ஆகியோரை கடந்த 11ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். மேலும் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் கனகவேலுவை அப்பணியிலிருந்து விடுவித்தும் உத்தரவிட்டார்.
மேலும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட மூன்று நபர்களிடமிருந்து வங்கியில் மோசடி செய்யப்பட்ட பணம் வசூல்செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டுறவுத் துறை உயர் அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி வங்கியின் செயலாளர் நீலகண்டன் மனமுடைந்து இருந்துள்ளார். மேலும் இந்த நகை மோசடியில் அந்த வங்கியின் தலைவரும் ஈடுபட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகண்டன் சொல்லிவந்ததாகக் கூறப்படுகிறது.
தொடரும் தற்கொலைகள்
இந்நிலையில் இன்று நீலகண்டன் அவரது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறியுள்ளனர். இதன் பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த கீரனூர் காவல் துறையினர் நீலகண்டனின் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
நகைக்கடன் மோசடியில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலத்தின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதேபோல், கடந்த 8ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட உதவிப் பொறியாளர் சந்தோஷ் குமார், திமுகவின் முக்கிய நபர்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என்பது நோக்கத்தக்கது.
இதையும் படிங்க: 'அரசு அலுவலர்களின் திடீர் மரணங்களை சிபிஐ விசாரிக்க வேண்டும்'