புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து திமுகவினர் நேற்று (மார்ச் 10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், இன்று (மார்ச் 11) அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்பு திமுக தொண்டர்கள் திரண்டு அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கூடாது என முழக்கங்களை எழுப்பினர். அப்போது வீரக்குமார் எனும் திமுக தொண்டர் அருகில் இருந்த செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து கட்டுமாவடி என்னும் இடத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பந்தா பாலசந்தர் எனும் திமுக தொண்டர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைப் பார்த்த தொண்டர்களும், காவல் துறையினரும் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். தொடர்ந்து, திமுக தொண்டர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.
அறந்தாங்கி தொகுதி, 2011, 2016ஆம் ஆண்டு திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 2011ஆம் ஆண்டில் திருநாவுக்கரசர் போட்டியிட்டார். அதனை தொடர்ந்து 2016ல் அவரது மகன் ராமச்சந்திரன் போட்டியிட்டார். இரண்டு முறையும் காங்கிரஸ் அறந்தாங்கி தொகுதியில், தோல்வியைச் சந்தித்தது.
அதேபோல், இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அறந்தாங்கி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படுவதாக வெளியான தகவலால் திமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். அறந்தாங்கித் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்பதே அக்கட்சி தொண்டர்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? டிடிவி பதில்