புதுக்கோட்டை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 5ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டமும், மார்ச் 20ஆம் தேதி மனித சங்கிலி போராட்டமும் நடத்த உள்ளதாக, அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை நகரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு மாவட்ட மாநாடு நேற்று (பிப்.19) நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் ஓய்வுதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 7வது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலனை செய்து, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் எங்களை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை. ஆனால், தற்போதைய முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து எங்களுடைய கோரிக்கைகள் குறித்து கேட்டு அறிந்ததார்.
எனவே, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் மார்ச் 5ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டமும், மார்ச் 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டமும் நடைபெற உள்ளது. இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த நிதி அமைச்சரின் பேச்சுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிப்போம் என்றார்.
இதையும் படிங்க: RajiniKanth: மகிழ்ச்சியாக இருக்கிறது! - திடீர் ட்வீட்டால் ரசிகர்கள் குஷி!