புதுக்கோட்டை: மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டு பணிகளை பார்வையிட்டு திரும்பிய புதுக்கோட்டை, அன்னவாசல் அதிமுக ஒன்றிய செயலாளர் சாம்பசிவம், சாலையை கடக்கும் போது எதிர்பாராத விதமாக கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பலத்தையும், கட்சியானது தன் கட்டுப்பாட்டில் தனக்கு ஆதரவாக உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக மதுரையில் அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை பிரம்மாண்டமான முறையில் நாளை(ஆகஸ்ட் 20) நடைத்த திட்டமிட்டு உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மேலும், அதிமுக தலைமையில் பேருந்து, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஆட்களை அழைத்து வர அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநாட்டிற்கு அழைத்து வரப்படும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எந்த விதத்திலும் பாதுகாப்பிற்கு குறைவு இருக்கக் கூடாது என்றும், மாநாட்டிற்கு வந்து செல்லும் வரை கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கு வேண்டும் என்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு, கழிப்பிடம், வாகன நிறுத்துமிடம், மருத்துவ வசதி, குடிநீர் உள்ளிட்டவைகள் அதிமுக சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த அதிமுக மாநாட்டிற்கு தொண்டர்களை பாதுகாப்பான முறையில் அழைத்து வருமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்நிலையில் மாநாட்டு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் மாநாட்டிற்கு முன்னதாக மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை அன்னவாசலை அடுத்த மருதாந்தலையைச் சேர்ந்தவர் அதிமுக ஒன்றிய செயலாளர் சாம்பசிவம் (வயது70). இவர் அதிமுகவில் நீண்ட காலமாக ஒன்றிய செயலாளராக பணியாற்றி வருகிறார். மேலும் அதிமுக தலைமைக்கும், குறிப்பாக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட். 18) மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டுப் பணிகளை பார்வையிட சென்று இருந்தார். பின்னர் இரவு 10 மணி அளவில் அவரது கட்சியினருடன் திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் முத்துடையான்பட்டி அருகே வீட்டுக்கு செல்வதற்காக இறங்கி உள்ளார்.
அப்பொழுது நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் அவர் மீது மோதி தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். ஒன்றிய செயலாளர் சாம்பசிவம் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அதிமுகவினரிடையே மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. நடந்தது என்ன?