புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி கடந்த 2011ஆம் ஆண்டு 100 பேரை பங்குதாரர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகள் கழித்து லாபத்தொகையை பிரித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு கல்லூரி இயங்கிவந்தது. இந்நிலையில் கல்லூரியின் நிர்வாகி, ஒப்பந்தப்படி ஐந்து ஆண்டுகள் முடிந்தும் லாபத்தொகையை பங்குதாரர்களுக்கு தராமல் இழுத்தடித்துள்ளார்.
மேலும், வரவு செலவு கணக்கையும் பங்குதாரர்களிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் கல்லூரியின் பங்குதாரர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அதிராம்பட்டினத்தில் பங்குதாரர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதில், எட்டரை கோடி ரூபாய் அளவில் பண மோசடி செய்து ஏமாற்றிய கல்லூரி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்லூரி நிர்வாகத்தை தங்களுக்கு மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிஜிபியிடம் புகார் அளிக்க இருப்பதாக பங்குதாரர்கள் முடிவெடுத்தனர். மேலும், இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.