புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூர் நீலி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு குறிஞ்சிப்பட்டி, காஞ்சிராம்பட்டி, சொக்கம்பட்டி, சீதாப்பாட்டி ஆகிய ஐந்து ஊர் கிராம மக்களால் சேர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி கோயில் திடலில் நடைபெற்றது.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, உசிலம்பட்டி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 850க்கும் மேற்பட்ட காளைகளும்; அதே போன்று பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டு, சீறிப்பாய்ந்து வந்த காளைகள் மாடுபிடி வீரர்களை கிட்டேயே நெருங்கவிடாமல், கொம்பால் மண்ணைக் குத்தி சீறி, மாடுபிடி வீரர்களை திக்குமுக்காட வைத்தது. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். இதனைச் சுற்றி அமர்ந்து பார்த்த பொது மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசு, வெள்ளிக்காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரர்கள் பார்வையாளர்கள் என 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஏழை என்ற சொல்லே இருக்கக்கூடாது - முதலமைச்சர் பழனிசாமி!