புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினருமான விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகள், ஆலோசனைகளை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போது தமிழ்நாட்டில் பாதிப்பு குறைந்துவந்தாலும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுக்க வேண்டும்.
கரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பியவர்களைக் கண்காணிப்பதற்கு மாவட்டந்தோறும் சிறப்பு கண்காணிப்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும். ஏனென்றால் சிகிச்சையிலிருந்து மீண்டவர்களுக்கு இதய நோய், கறுப்புப் பூஞ்சை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மூன்றாவது அலை வரக்கூடாது; வர வேண்டாம். ஆனால் அதே நேரத்தில் தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் நம் மாநிலம் நல்ல சுகாதார கட்டமைப்பைக் கொண்டது.
போர்க்கால அடிப்படையில் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.