புதுக்கோட்டையின் மத்தியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குருவிக்கொண்டான்பட்டி கிராமம். செட்டிநாட்டிற்கு பெயர் போன இந்த கிராமம் அமைதிக்கும் அன்பிற்கும் அடையாளமாக திகழ்கிறது. இங்கு 1951 முதல் இதுவரை உள்ளாட்சித் தேர்தலே நடைபெற்றது கிடையாதாம்.
எந்தவித போட்டியுமின்றி மக்களாக இணைந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில் இம்முறை விசாலாட்சி என்ற பெண் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவ்வூரில் உள்ள மூன்று சமுதாயத்தினரில் இரண்டு பேர் வீதம் ஆறு பேர் ஊராட்சி மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி கூறியதாவது, "நான் தலைவர் ஆகிறேன் என்று விருப்பம் தெரிவித்தேன். அதனால் போட்டியிட விரும்பியவர்கள் விட்டுக்கொடுத்து விட்டார்கள். இது தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது. அதனால் எங்களது ஊரில் உள்ளாட்சி தேர்தல் என்பதே கிடையாது. நிச்சயம் என் கிராம மக்களுக்கு வேண்டியதை செய்வேன்." என்று தெரிவித்தார்.
இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாசலம், தான் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது என்ன தேவை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்வார்கள் என்றும், இங்கு அரசியலை வைத்து ஊழல் நடக்காது, இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் இது போலதான் எங்கள் ஊரில் கடைபிடிக்கப்படும், இதுவரை நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
ஊரே ஒன்று கூடி ஊராட்சி மன்ற தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதால் இந்த ஊரில் போட்டி, பொறாமை, பிரச்சாரம், பிரச்னை என்பதற்கெல்லாம் இடம் கிடையாது. தேர்ந்தெடுக்கப்படும் நபர் அதிகாரம் செலுத்தாமல் தன் கடமையையே செய்கிறார். மேலும் மக்களின் குறைகளை தானே முன் நின்று கேட்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காண்கிறார். எப்போதும் நிலவி வரும் அமைதி, மக்களுக்கிடையேயான பிணைப்பு, வித்தியாசமான அரசியல் முறை, இந்த ஒட்டுமொத்த சூழ்நிலைக்கும் காரணம் இந்த கிராமத்து மக்களின் ஒற்றுமையே!
இதையும் படிங்க: பிரதமர் மோடி நாட்டை தவறாக வழிநடத்துகிறார் - அசோக் கெலாட்