புதுக்கோட்டை: ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராம கடற்கரையிலிருந்து கடந்த 22ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நாட்டுப்படகு மூலம் கருணானந்தம் (29), ராஜதுரை (25), பாண்டி (37), நாகூர்கனி (30), தூண்டிமுத்து (38) ஆகிய ஐந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
கடந்த 23ஆம் தேதி காலை கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் கரை திரும்பவில்லை. இந்நிலையில் கோட்டைப்பட்டினம் கடலோர பகுதியிலிருந்து மூன்று நாட்டிக்கல் தொலைவில் நாட்டுப்படகு ஒன்று பழுதாகி நிற்பதாக, மணமேல்குடி கடலோரப் பாதுகாப்புக் குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆய்வாளர் முத்துக்கண்ணு, உதவி ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நடுக்கடலில் தத்தளித்த ஐந்து மீனவர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மேலும் பத்திரமாக மீட்கப்பட்ட மீனவர்கள் ஏம்பவயல் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு பின்பு அவர்களின் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.