புதுக்கோட்டை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நாளை அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பே லோடு சேலஞ்ச்-2021 நிகழ்ச்சி கின்னஸ் சாதனை முயற்சியாக நடைபெறவுள்ளது. இதில், 100 அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்கள் தயாரித்த சிறிய அளவிலான செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. இதற்காக, நல்லோர் வட்டம் என்ற அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப்பள்ளி கல்லூரியில் பயிலும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணினித் துறையில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகளை தேர்வு செய்தது.
அவர்களுக்கு, ஆறு நாள்கள் செயற்கைக்கோள்களை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டதோடு, ஒரு நாள் நேரடி செயல்வழி பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், விவசாயம், தீவிர கதிர்வீச்சு, காற்றின்வேகம், ஓசோன் பாதிப்பு போன்ற தலைப்புகளில் செயற்கைக்கோள்களை மாணவர்கள் தயாரித்துள்ளனர். இதற்காக ராணுவ அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்தக்குழுவில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா ஆதனக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி இடம்பெற்றுள்ளார். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்துவரும் இவர், பிரபாகரன் புரட்சி விதைகள் என்ற அமைப்பில் செயல்பட்டுவருகிறார்.
இவர், ஏற்கனவே, நாசா செல்வதற்கு தேர்வு எழுதி அதில், தேர்ச்சி பெற்று அமெரிக்கா செல்வதற்கான வாய்ப்பை பெற்றவர். வறுமையிலுள்ள இம்மாணவிக்கு பல்வேறு அமைப்பினரும் உதவி செய்துவருகின்றனர். இந்நிலையில், இவர், விரைவில் அமெரிக்கா செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கையளவு செயற்கைக்கோள்களை உருவாக்கி மாணவர்கள் சாதனை!