பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமத்தில் ஊருக்கு மேற்கு பகுதியில் ஏரி உள்ளது. பருவ மழை பெய்தால் ஏரியில் தண்ணீர் நிரம்பி சுற்றுப்புற பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனிடையே இந்த ஏரி கடந்த ஐந்து ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் சீமை கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்பட்டன.
இந்நிலையில், இரூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தங்களால் முடிந்தளவு நிதி திரட்டி ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் உதவியை எதிர்பார்க்காமல் பொதுமக்களே முன்னெடுத்து நடத்தும் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.