பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்திப்பெற்ற அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயிலில் சித்திரலேகா சமேத குபேர பெருமான் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
மேலும் 12 ராசிகளுக்கு 12 குபேர பெருமான் 12 தூண்களில் இருப்பது தனிச்சிறப்பு. இத்திருத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் குபேர பெருமான் இழந்த செல்வங்களை மீட்ட தினமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று குபேர யாகம் நடைபெறும்.
இதனையொட்டி, கணபதி பூஜையுடன் யாக வேள்வி தொடங்கியது. பின்பு, 96 வகை மூலிகைப் பொருட்கள் யாக வேள்விகள் செலுத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை மற்றும் அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.
குபேர யாக வேள்வியில் கலந்துகொண்டால் கடன் பிரச்னைகள் தீரும், இழந்த செல்வங்களை மீட்க நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.