கரோனா வைரஸ் தாக்கம் குறையாத காரணத்தினால் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள், கண்டிப்பாகத் தனிநபர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தில் சமய மாநாட்டிற்குச் சென்றுவந்த நபர், அவரின் மைத்துனர், வி.களத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் என ஒரே ஊரில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் வி.களத்தூர் கிராமம் முழுவதும் சுகாதாரத் துறை அலுவலர்களால் சீல்வைக்கப்பட்டது. மேலும், வைரஸ் பரவலைத் தடுக்க கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
குறிப்பாக அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் வி.களத்தூர் கிராமம் மக்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா என்பதை ட்ரோன் மூலம் வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பிரபு ஏற்பாட்டின்படி கண்காணிக்கும் பணி நடைபெறுகிறது.
மேலும், காவலருக்கு கரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன. அங்கு பணிபுரியும் 17 காவலர்கள், 7 ஊர்க்காவலர் படையினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காவலருக்கு கரோனா: காவல் நிலையமாக மாறிய வாகனம்!