தமிழ்நாட்டில் மழையின் அளவு குறைந்து, நிலத்தடி நீரும் வற்றியதையடுத்து மக்கள் தண்ணீருக்காக பெரும் பாடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சத்தில் தள்ளாடியது. இந்நிலையில் வறண்டுபோன பல ஏரிகளை அந்தந்த ஊர் மக்கள், தன்னார்வலர்கள் இணைந்து தூர்வாரி வருகின்றனர்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் உள்ள அல்லிநகரத்தின் ஏரிதான் இப்பகுதியின் நீராதாரமாக விளங்கியது. இந்த ஏரி வறண்ட நிலையில் சீமைக்கருவேல மரங்களால் நிறைந்து காணப்பட்டது. வாய்க்கால்கள் சீரமைக்கப்படாமல் இருந்ததால் பெய்யும் மழைநீரை முறையாக சேமிக்க முடியாத சூழல் இருந்தது. இந்த நிலையில் இந்த ஊர் இளைஞர்கள் நிதி திரட்டி ஊரில் உள்ள இரண்டு ஏரிகளில் இருந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றினர்.
இதனிடையே அப்பகுதி இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லிநகரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஜேசிபி மூலம் அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் அந்த ஏரிக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமாக நீர் வரத் தொடங்கி உள்ளது. இளைஞர்களின் இந்தச் செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.