பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட நான்கு ஒன்றியங்களின் பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பண்ணை அமைத்து கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு தனியார் கோழி விற்பனை நிறுவனத்தினர் இவர்களை அணுகி தங்கள் பண்ணையில் பொறித்த கோழிக்குஞ்சுகளை வழங்குவார்கள். மேலும் அவற்றுக்கான தீவனம் உள்ளிட்டவைகளையும் வழங்குவர்.
பண்ணை வைத்திருப்பவர்கள் கோழிக்குஞ்சுகளை வளர்த்து, 70 லிருந்து 80 நாள்கள் வளர்ந்த கோழிகளை தனியார் கோழி நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகைக்கு விற்பனை செய்வர்.
தற்போது கரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தி காரணமாக கோழிப்பண்ணைகளில் கோழிக்குஞ்சுகள் இல்லாத காரணத்தால் வெறிச்சோடிக் காணப்படுகிறது. மேலும் ஊரடங்கால் கறிக்கோழி வளர்ப்பு தொழில் முடங்கியதால் கோழிப் பண்ணை வைத்திருப்பவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.