பெரம்பலூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் வருகை புரிந்த மதிமுகவின் முதன்மைச் செயலர் துரை வைகோ, பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை செய்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "22 தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து விடுவித்துள்ளது. கடந்த 5 வருடங்களாக மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. மீன் பிடி தொழில் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம். இருப்பினும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு தமிழக மீனவர்களையும் அவர்களது உடைமைகளையும் காக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்திய எல்லைக்குள் வரும் இலங்கை அரசின் மறைமுக ஆதரவோடு வரும் கடற்கொள்ளையர்களை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை,
ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்து வருகிறார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது, வழக்கு தொடர்பாக ஆளுநருக்கு நீதிபதிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இல்லாத நிலையிலும், எதிர்க்கட்சியாக இருந்து தமிழக அரசின் முக்கிய தீர்மான மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
ஆனால் பாஜகவுக்கு மறைமுக ஆதரவாக தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திவருகிறார். ஆளுநரின் நடவடிக்கை தமிழக மக்களின் நலனுக்கு எதிரானது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், மதிமுக போட்டியிடும் தொகுதி மற்றும் கூட்டணிகள் குறித்து கேள்விக்கு, திமுக தலைவருடன் இதற்கான பேச்சு வார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை, நாடாளுமன்றத் தேர்தல் இட ஒதுக்கீடு குறித்து பேசும்போது அது குறித்த தகவல் தெரிவிக்கப்படும், மேலும் பம்பரம் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது மதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் ரோவர் வரதராஜன், துரைராஜ், உள்ளிட்ட மதிமுக மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் தங்கையை காதலித்த இளைஞர் கொலை; இரண்டு சிறுவர்கள் உள்பட நான்கு நபர் கைது..விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!