சென்னை: பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை திருமாந்துறை டோல்பூத் பணியாளர்கள் மூன்றுநாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு ஆதரவாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 'பெரம்பலூர், திருமாந்துறை மற்றும் உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி டோல்பூத்தில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய 56 பேரை காரணமின்றி நீக்கியது சமூகநீதிக்கு எதிரானது, அராஜகமானது.
மேலும் டோல்பூத் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி நீக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், புதுச்சேரியில் தொழிலாளர் நலத்துறை பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்' என்று தெரிவித்தார்.
டோல்பூத் பணியாளர்களின் போராட்டத்திற்கு சிதம்பரம் தொகுதி எம்.பி என்ற வகையில் தொல்.திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்நிலையில் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக, இந்த சுங்கச்சாவடியில் மூன்று தினங்களாக வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுத்தை உயிரிழந்த விவகாரம்: தேனி எம்.பி.ஓ.பி.ரவீந்திரநாத்தை கைது செய்யக்கோரி போராட்டம்