பெரம்பலூர்: தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில், பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.க.வினருக்கு, பண்டிட் தீனதயாள் உபாத்தியாய உள்ளாட்சி பிரதிநிதிகள் பயிலரங்கம் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல் .முருகன், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக.வின் தமிழ்நாடு தேசிய கூடுதல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
திமுகவில் யாரும் படித்தவர்கள் கிடையாது: அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் வெளிநாடு சென்றது குறித்து பேசியதை எதிர்த்து தி.மு.க சார்பில் அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “வழக்கு குறித்து தனக்கு இன்னும் நோட்டீஸ் வரவில்லை” எனத் தெரிவித்தார். மேலும் அது என்ன மாதிரியான வழக்கு என்று தெரியவில்லை என்றும், தெரிந்த பிறகு அதனை எவ்வாறு கையாள போகிறேன் என்று தெரிவிக்கிறேன் என்றும் கூறினார்.
தாங்கள் 20 ஆயிரம் புத்தகங்களை படித்துள்ளது குறித்து தி.மு.க.வினர் விமர்சனம் செய்துள்ளனரே என்ற கேள்விக்கு, தி.மு.க.வில் யாரும் படித்தவர்கள் கிடையாது- அவர்களுக்கு எதையுமே படிக்கும் பழக்கம் கிடையாது என்று விமர்சித்தார். தனது இந்த பேச்சுக்கும் கூட வேண்டுமானால் அவதூறு வழக்கு போட்டுக் கொள்ளட்டும், தனக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்தார்.
பெட்ரோல் விலை விரைவில் குறையும்: உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு 95 சதவீதம் நிதியை மத்திய அரசு நேரடியாக வழங்கி வருகிறது, ஆனால் மாநில அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் கூட, அதிக அளவில் நிதி ஒதுக்கவில்லை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவியும் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், விரைவில் விலை குறையும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தி காஷ்மீர் ஃபைல்ஸ்; கெஜ்ரிவால் கேள்விக்கு பதிலளிக்குமா பாஜக?