பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாயத்தை அழிக்கின்ற அவசர சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தி பிரதமர் மோடிக்கு தபால் மூலம் அனுப்பிய கோரிக்கையை வலியுறுத்தியும், பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி "கிசான் சம்மன் நிதி உதவி" திட்டத்தில் முறைகேடு, பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், விவசாய கிணறு வெட்டும் திட்டம், மக்காச்சோளத்தில் பூச்சி மருந்து அடிக்கும் திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடைபெற்றுள்ளதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முகமது அலி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. அலுவலர்கள், ஆட்சியரின் துணையுடன் ஊழல் நடந்துள்ளது என்றார்.