நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் விவசாயம் தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக உள்ளதாக குற்றஞ்சாட்டி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இச்சட்டங்களுக்கு எதிராக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். காவல் துறையினரின் தடையை மீறி, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பெரம்பலூரில் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை சந்தித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக அரசும், மத்தியில் ஆளும் பாஜக அரசும் ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்படுகிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, போராடுவதற்கான உரிமை என்பது ஜனநாயகத்திற்கு உண்டு.
இந்த உரிமைகள் மறுக்கப்படுவது ஜனநாயகம் மெல்ல கழுத்து நெரிக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதற்கு சமம்" என்றார்.
இதையும் படிங்க: சிறப்பாக ஆளும் தமிழ்நாடு - பெருமிதம் பொங்க முதலமைச்சர் ட்வீட்