பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஒதயம் சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு(42). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இவரின் குடியிருப்பு பகுதிக்கு வந்த குரங்கை அப்பகுதியில் உள்ள நாய்கள் விரட்டி கடித்துள்ளன. இதில் பலத்த காயமடைந்த குரங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தட்டுத்தடுமாறி ஒரு மரக்கிளையில் ஏறி படுத்தவாறு மயங்கி மூர்ச்சையாகிப் போனது. இதுகுறித்து பணிமுடிந்து வீடு திரும்பிய பிரபுவிற்கு தெரியவந்தது.
உடனே மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த குரங்கைப் பத்திரமாகக் கீழே இறக்கிய பிரபு அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் நெஞ்சு பகுதியில் கையால் அழுத்தி சிகிச்சை வழங்கியதோடு, வாயோடு வாய் வைத்து ஊதி குரங்கிற்கு மூச்சு வர செய்தார். இதனைத்தொடர்ந்து குரங்கு மூச்சு விடத் தொடங்கியது.
சிகிச்சை
இதனையடுத்து தனது இருசக்கர வாகனத்தில் நண்பர்கள் உதவியுடன், அருகே இருந்த கால்நடை மருத்துவரிடம் சேர்த்து, குரங்கிற்கு முறையான சிகிச்சை அளித்தார். அதன் பிறகு குரங்கு உயிர் பெற்று கண் விழித்துப் பார்க்கத்தொடங்கியது.
அதனைப்பார்த்து ஆனந்தமடைந்த பிரபு, குரங்கிற்கு முத்தமிட்டார். மேலும் வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் குரங்கை பிரபு ஒப்படைத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: 'டேலண்ட் இருக்கா? கலந்துக்கங்க...'; ராக்கி படக்குழுவின் அசத்தல் அறிவிப்பு!