தமிழ்நாட்டில் சின்ன வெங்காய உற்பத்தியில் முதலிடத்தில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. இங்கு பெரும்பாலான பகுதிகளில் தற்போது நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் தனது வயலில் நடவு பணிகளுக்காகப் பட்டரை போட்டு 15 மூட்டை சின்ன வெங்காயம் வைத்திருந்தார்.
இதற்கிடையில் இவர் தனது சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று (ஆகஸ்டு.21) மதியம் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வயலில் சென்று பார்த்தபோது சின்னவெங்காயம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இதுகுறித்து மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் மருவத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருடப்பட்ட வெங்காயத்தின் மதிப்பு ரூ. 65 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.