திருச்சி சரக காவல் துறை, இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் கேடயம் என்ற செயல்திட்டத்தை தொடங்க உள்ளனர்.
இத்திட்டமானது திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தோ அறக்கட்டளை இணைந்து செயல்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.9) கேடயம் செயல்திட்டம் தொடங்கப்பட்டது. இதனை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தொடங்கிவைத்தார்.
இத்திட்டத்தின் குறிக்கோள் திருச்சி சரகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றச் செயல்களில் தரவுகளைச் சேகரித்து அதில் மிகத் தீவிரத்தன்மை கொண்ட ஆறு குற்றங்களைக் கண்டறிவது மட்டுமல்லாமல் அதிகமாக குற்றங்கள் நடைபெறும் 25 இடங்களை அடையாளம் கண்டறிவது ஆகும்.
மேலும் இந்தக் குழு பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு நலன் சார்ந்து இயங்கும் செயல்பாட்டாளர்கள், அமைப்புகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
இதுமட்டுமின்றி பொதுமக்கள் இடையே உள்ள அச்சத்தைப் போக்க சமூக காவலை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளும்.
இதனைத் தொடர்ந்து கேடயம் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன. இந்த நிகழ்வில் காவல் துறை அலுவலர்கள் சமூக நலத் துறை, குழந்தைகள் நலத் துறை, கல்வித் துறை அலுவலர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.