பெரம்பலூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இளம் பெண்களை அதிமுக எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான அருள் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையில் புகார் அளித்தார். இந்நிலையில், பொய் புகார் அளித்ததாகக் கூறி இரண்டு தினங்களுக்கு முன்பு அவரை காவல்துறையினர் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய போலியான ஆடியோவை வெளியிட உதவியாக இருந்ததாக அவரின் உதவியாளராக பணிபுரிந்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வருகின்ற 16ஆம் தேதி வரையில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.