தமிழ்நாடு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மின்மோட்டார் இயக்குநர் மற்றும் துப்புரவுப் பணியாளர் சங்கம் சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இது, சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் அவர்கள் விடுத்த கோரிக்கையாவது:
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி வேப்பந்தட்டை, வேப்பூர் ஒன்றியங்களில் ஊதியம் நிர்ணயம் செய்து, நிலுவைத்தொகை வழங்குவதோடு, தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும். மேலும், 2020ஆம் ஆண்டு அரசு அறிவித்த பொங்கல் போனஸ் ரூபாய் 1000 இதுவரை வழங்கப்படவில்லை, எனவே உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
தொடர்ந்து, டேங்க் சுத்தம் செய்ததற்கென்று, 2016 முதல் கூலி தொகை வழங்கப்படவில்லை. இதனால், வழங்கப்படாத அந்த நிலுவையை உடனே வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு, மாதாந்திர ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கக்கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மின்மோட்டார் இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ’பாஜகவுடனான உறவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ - திருமாவளவன் கோரிக்கை