தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த பெரியார் சமத்துவபுரம் முன்பாக தந்தை பெரியாரின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டு இருப்பதையும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு திராவிடர் கழக பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தின் போது பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.