பெரம்பலூர்: சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சிய கொத்தனார் மற்றும் அவரது கூட்டாளியை அவரது பெண் தோழி அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், வேங்கூர் அருகே உள்ள நெடுமுடியான் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (37). கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு, அம்பிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று, அவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
இதனிடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாக்கியராஜ் தன் குடும்பத்தைப் பிரிந்து சென்றுள்ளார். இதன் பின் பாக்கியஜாஜ்-க்கு அவருடன் சித்தாள் வேலை பார்த்து வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பெண் தனது பத்து வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் பாக்கியராஜுடன் அவர் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: நாகை போலீசாரின் அதிரடி ஸ்ட்ராமிங் ஆபரேஷன்.. ஒரே நாளில் 85 நபர்கள் அதிரடி கைது!
இந்நிலையில், நேற்று இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பாக்கியராஜ் வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த இந்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் ஊறலில் இருந்த 100 லிட்டர் கள்ளச் சாராயத்தைக் கண்டறிந்த போலீசார், அதனை உடனடியாக அங்கேயே கொட்டி அழித்தனர்.
மேலும், குடிப்பதற்கு தாயார் நிலையில் வைத்திருந்த ஒரு லிட்டர் சாராயத்தைப் பறிமுதல் செய்த போலீசார், பாக்கியராஜ் மற்றும் கொத்தனார் வேலை செய்யும் அவரது கூட்டாளி குமரேசன் (25) ஆகியோரை சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காகக் கைது செய்து, பெரம்பலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் குடியிருக்கும் வாடகை வீட்டிலேயே சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.