பெரம்பலூர்: தேனி போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் பிஇ தகவல் தொழில்நுட்பம் பொறியில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், பெங்களூருவிலுள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக நிறுவனம் மூடப்பட்டதால், இவர் தனது அறையில் இருந்து கொண்டே நூதன முறையில் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக ஜெகன் போலியாக பல்வேறு முகநூல் பக்கங்களை உருவாக்கி அதன் மூலம் ஆண், பெண் என பலரிடம் நட்பை உருவாக்கியுள்ளார். இவரது முகநூல் நட்பு வட்டாரத்தில் சேலம் மாவட்டம் கே.மோரூர் கிராமத்தைச் சேர்ந்தவர ரினேஷ் என்பவரும் இணைந்துள்ளார். ரினேஷ் தற்போது பெரம்பலூரிலுள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார்.
நூதன முறையில் மோசடி
இதனைத்தொடர்ந்து பிரைவேட் சாட் மூலமாகவும், செல்ஃபோன் நம்பரை பெற்று அதன் மூலமாகவும், தான் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், விரைவில் சொந்த ஊருக்கு வரவுள்ளதால், வரும் போது, லேப்டாப், ஆப்பிள் ஐபோன் போன்றவற்றை எடுத்து வரவுள்ளதாகவும் ஜெகன் தனது முகநூல் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு நண்பர்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றும் இந்தியா வந்தவுடன் விலை உயர்ந்த லேப்டாப், ஆப்பிள் ஐஃபோன் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய ரினேஷ், பெற்றோர், உறவினர்கள், நண்பர்களிடமும் கடனாக வாங்கி, அதனை பல்வேறு தவணைகளில் மொத்தமாக ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை ஜெகன் கொடுத்த வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஜெகனை தொடர்பு கொண்டபோது, அவர் செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்ததோடு, தனது போலியான முகநூல் பக்கத்தையும் முடக்கி வைத்து விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட ரினேஷ், பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலுள்ள சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார்.
கைது
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல் துறையினர், ஜெகனை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துள்ளனர். தொடர்ந்து ரினேஷ் பணம் செலுத்திய வங்கிக்கணக்குகளிலுள்ள விலாசத்தை பெற்றபோது, அது பெண்கள் பெயரியில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்களை நேரில் சந்திந்து விசாரித்தபோது, அவர்களும் ஜெகனின் முகநூல் நண்பர்கள் என்றும், தனக்கு அக்கௌண்ட் இல்லை என்றும் அதனால், உங்கள் அக்கௌண்ட்டில் பணம் அனுப்ப சொல்லி அதனை எடுத்துக்கொள்வதாகவும் கூறி, பெண் நண்பர்களிடம் ஏடிஎம் கார்டையும் ஜெகன் பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பெங்களுருவில் இருந்த ஜெகனை பெரம்பலூர் சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், ஜெகன் இதுபோல பலரிடம் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, ஜெகனிடம் இருந்து 2 செல்ஃபோன்கள், 2 ஏடிஎம் கார்டுகள், 4 சிம்கார்டுகள், 85 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஜெகனை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பெரம்பலூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 63 வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு கரோனா பரிசோதனை; பின் சிறையில் அடைப்பு