பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பரபரப்பு தனிவதற்குள் பெரம்பலூரில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் பல பெண்களை தனிமையில் அழைத்து நட்சத்திர விடுதி ஒன்றில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் அருள் என்பவர் மாவட்ட எஸ்.பியிடம் அளித்த புகாரின் அடிப்படையில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாகா கமிட்டியின் அடிப்படையில் சுப்புலட்சுமி என்ற பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விசாரணைக்கு சென்ற வழக்கறிஞர் அருள், நேற்றுமுன்தினம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஆதாரங்களைக் கொடுத்த பின்பும் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் இல்லை. இந்நிலையில், பாலியல் புகாரில் திடீர் திருப்பமாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை அதிமுகவினர் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வைத்து மிரட்டுவதாக பேசிய ஆடியோவை அனைத்து செய்தியாளர்கள் முன்னிலையில் வழக்கறிஞர் அருள் வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு வேலைக்கு நேர்முக தேர்வுக்கு அழைத்து தன்னை நட்சத்திர விடுதி அறையில் அதிமுக பிரமுகர் பாலியலுக்கு அழைத்தது ஆடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இதன் பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர் நீதிமன்றம் வாயிலாக சிபிசிஐடி போலீஸ் விசாரணை கோருவேன். மேலும் தன்னிடம் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை ஓரிரு நாட்களில் சென்னை பிரஸ் கிளப்பில் வெளியிடுவேன், என்றார்.
பெரம்பலூரில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மீது எழுந்துள்ள பாலியல் புகாரை உறுதிப்படுத்தும் வகையில் ஆடியோ வெளியானது, மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.