மதுரை: சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், தமிழ்நாட்டு மண்ணின் கலை, பண்பாடு, பாரம்பரியங்களை அறிந்து கொள்வதில் அலாதியான விருப்பம் கொண்டவர்களாவர். அதன் அடிப்படையில் அந்நாட்டின் கல்வி அமைச்சகம், தமது மாணவ, மாணவியருக்கு அவற்றைக் கற்றுத் தரும் நோக்கில் பண்பாட்டுச் சுற்றுலாக்களை ஊக்குவித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரைக் கொண்ட குழு ஒன்று மதுரைக்கு வருகை தந்துள்ளது. கடந்த 8 நாட்களுக்கும் மேலாக மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு வரலாற்றுச் சிறப்பும், தொன்மையும், பெருமையும் வாய்ந்த கீழடி, கீழக்குயில்குடி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வந்தனர்.
இந்நிலையில், மதுரை அரசு அருங்காட்சியகம் சார்பாக காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்ற கலை, பண்பாட்டு பயிற்சி முகாமில் இன்று (நவ.23) கலந்து கொண்டனர். இதன் மூலமாக பறை இசை, ஒயில் கும்மி, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளை கற்றுக் கொண்டனர். அத்துடன் மரபு சார்ந்த வாழ்வியல் முறைகளான உரலில் இடித்தல், அம்மியில் அரைத்தல் உள்ளிட்டவற்றையும் கற்றறிந்தனர்.
இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மீ.மருதுபாண்டியன் கூறுகையில், "கடந்த 8 நாட்களாக சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் கலை, கலாச்சார, பாரம்பரியப் பெருமைகளை அறிந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று அரசு அருங்காட்சியகத்திற்கு வருகை தந்துள்ளனர். பறை, ஒயில், சிலம்பு ஆகியவற்றில் விற்பன்னர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது.
அதேபோன்று உரலில் கம்பு தானியத்தை இடித்தும், அம்மியில் மசாலா அரைத்தும் நமது பாரம்பரிய வாழ்வியல் முறைகளை அறிந்து கொண்டனர். மிக ஆர்வத்துடன் மாணவ, மாணவியர் கற்றுக் கொண்டனர். இதற்காக சிங்கப்பூர் அரசுக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களின் கலை, கலாச்சாரம் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் மிகுந்த அக்கறையோடு இதனை ஒழுங்கு செய்துள்ளது" என்று தெரிவித்தார்.
இது குறித்து ஒயில் கும்மி ஆசான் தங்கப்பாண்டியன் கூறுகையில், "இதற்கு முன்பாக பலமுறை சிங்கப்பூரிலுள்ள உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியில் இந்த மாணவர்களைப் பயிற்றுவித்துள்ளேன். அங்குள்ள மாணவ, மாணவியர் நமது பாரம்பரியக் கலைகளைக் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். பாரம்பரியக் கலைகளை முழுமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அந்த மாணவர்கள் மதுரைக்கு வருகை தந்துள்ளனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் அங்கிருந்து மாணவர்கள் இங்கே வருகை தர உள்ளனர். வர வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பமும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: “மதம் என பிரிந்தது போதும்..” பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு நாகத்தம்மாள் கோயிலில் இருந்து சீர்வரிசை!
வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் செல்லப்பாண்டியன் கூறுகையில், "ஒரு வாரம் கள ஆய்வுப் பயணமாக சிங்கப்பூர் தமிழ் மாணவ, மாணவியர் வருகை தந்துள்ளனர். மதுரையின் பாரம்பரியத்தையும், தமிழர் பண்பாட்டின் சிறப்புக்கூறுகளையும் அறிந்து கொள்வதுதான் இவர்களது பயணத்தின் நோக்கம்.
அதேபோன்று அரிய தொல்லியல் சின்னங்கள் உள்ள யானைமலை, லாடன் கோயில், கீழடி உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டுள்ளனர். மரபு சார்ந்த கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இவர்களது பயணத்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் பழமையான புழங்கு பொருட்கள் இந்த மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை நேரடியாகப் பார்த்து, உணர்ந்து மகிழ்ந்தனர்.
இதுமட்டும் அல்லாது, மிகப் பழமையான தமிழி எழுத்துக்கள், வட்டெழுத்துக்கள் குறித்தும் அவர்களுக்கு அறிமுகம் தரப்பட்டுள்ளது. தமிழர்களின் எழுத்து, கலை, மொழி, பண்பாடு, இலக்கியம் குறித்தும் பொதுவான புரிதல் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற சுற்றுலாக்கள் தமிழ்ப்பாரம்பரியம் குறித்து அவர்களுக்கு உணர்த்துவதாக உள்ளது என்பதே உண்மை. அடுத்தடுத்து மாணவர்கள் அங்கிருந்து தமிழகம் வருகை தர உள்ளனர். இதனை சிறப்பான முறையில் மேற்கொண்ட ஆசிரியர்களுக்கும், சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்திற்கும் நன்றி" என்றார்.
இதன் தொடர்ச்சியாக சிங்கப்பூரில் இருந்து மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர்கள் கூறுகையில், "சிங்கப்பூருக்கும், தமிழ்நாட்டுக்குமான தொடர்பு உணர்வுபூர்வமானது. எங்கள் நாட்டில் பயில்கின்ற தமிழ் மாணவ மாணவியர் அவர்தம் வேர்களை பாரம்பரியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் நாட்டு அரசு இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த பண்பாட்டுச் சுற்றுலா. எட்டு நாட்கள் போனதே தெரியவில்லை மாணவ மாணவியர் நிறைய கற்றுக் கொண்டுள்ளனர். இதனை எங்கள் நாட்டில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் அவர்கள் கற்றுத் தருவார்கள் என நம்புகிறோம் என்றனர்" என்று அகம் மகிழ்ந்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்