ஊரடங்கினால், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாத இறுதியில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் இருந்து வருகிறது. இந்தச் சிக்கலை நீக்கவும், தன்னிடம் பயிலும் மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்திலும், பெரம்பலூர் மாவட்டம் நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வ சிகாமணி புது முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
இவர், பணிபுரியும் இரூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் மொத்தம் 29 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களை, தேர்வுக்கு தயார்படுத்த அவர்களுக்கென பிரத்யேக வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளார். அதில், மாணவர்களுக்கான வினாத்தாள்களை அனுப்புகிறார். பெற்றோர்களின் முன்னிலையில் அந்த வினாக்களுக்கு விடையெழுதி அந்த விடைத்தாள்களை அதே வாட்ஸ்அப் குழுவில் மாணவர்கள் அனுப்புகின்றனர்.
இந்த விடைத்தாள்களைத் திருத்தம் செய்யும் இவர், மாணவர்கள் தங்களை மேம்படுத்தவும் தகுந்த ஆலோசனைகளை வழங்குகிறார். ஊரடங்கினால் மாணவர்களின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என ஆசிரியர் எடுத்திருக்கும் இந்த சீரிய முயற்சிக்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு நல்குகின்றனர். இதுமட்டுமில்லாமல் தன் வீட்டைச் சுற்றியிருக்கிற பத்தாம் வகுப்பு மாணவர்களையும் தேர்வுக்கு தயார்படுத்திவருகிறார் செல்வ சிகாமணி.
செல்வ சிகாமணியைப் பாராட்டி பேசும் மாணவர்களின் பெற்றோர்கள், "இந்த ஊரடங்கினால், எங்கள் பிள்ளைகளுக்கு தேர்வை எதிர்கொள்ள அச்சம் வந்துவிட்டது. எங்கள் பிள்ளைகளை எவ்வாறு தேர்வுக்கு தயார்படுத்துவது என தெரியாமல் நாங்கள் விழித்துக் கொண்டிருந்தோம். அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் ஆசிரியர் செல்வ சிகாமணி சிறந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார் " என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
வாரத்தில் இரண்டு நாள்கள் மாணவர்களது வீட்டிற்குச் சென்று சந்தித்து மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கின்றார். தனக்கு கீழ் பயிலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செல்வ சிகாமணி எடுத்திருக்கும் இத்தகைய முயற்சி மற்ற ஆசிரியர்களுக்கும் உந்துதலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கவில்லை என்றால் போராட்டம் - அய்யாக்கண்ணு!