பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி அரசு பள்ளி கோ-கோ விளையாட்டில் மாநில அளவில் 3ஆம் இடம்பெற்று சாதனை புரிந்தது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியுடன் கூடுதலாக சிலம்பம், சுருள்வாள் வீச்சு, கராத்தே, கோலாட்டம் உள்ளிட்ட பாராம்பரிய மிக்க தற்காப்புக் கலைகள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், பொது மக்கள் இணைந்து பள்ளியின் மேம்பாட்டிற்காக 'சில்லக்குடி அரசுப் பள்ளி பேரியக்கக் குழு' என்ற குழுவினை தொடங்கியிருந்தனர். இந்தக் குழு முயற்சியால் இப்பள்ளியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டி, நவீன கழிப்பறை, கை கழுவும் குழாய்கள் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு வசதிகள் கொண்ட இப்பள்ளிக்கு இதுவரை சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்படவே இல்லை. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்தி விட்டு மின் இணைப்பை துண்டிப்பது, மின் விளக்குகளை உடைப்பது, அசுத்தும் செய்வது உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபடுகின்றனர். அரசு சுற்றுச்சுவர் கட்டித் தருவதற்குள் சமூக விரோதிகள் பள்ளியையே இல்லாமல் ஆக்கிவிடுவர் என்ற சூழல் உருவாகியது.
இந்நிலையில் அரசை எதிர்பார்க்காமல் பள்ளியை காக்க பொதுமக்கள் முயற்சியால் கண்காணிப்புக் கேமரா பொருத்துவதென முடிவு செய்யப்பட்டதாக பேரியக்கக் குழுவினர் தெரிவித்தனர். அதன்படி பள்ளி வளாகத்தின் வெளிப்புறம் நான்கு இடங்களிலும், உள் பகுதியின் முகப்பிலும் என மொத்தம் ஐந்து இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் சமூக விரோதிகளின் செயல்களை கண்காணிக்க முடியும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.