பெரம்பலுாரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் விளாமுத்தூர் அங்கன்வாடி மையம் அருகில் உள்ள பொது இடத்தில் சமுதாய அளவில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் சாந்தா தொடங்கிவைத்தார்.
இதனையடுத்து அவர் பேசுகையில், “ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா செப்டம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. கர்ப்பிணிகள் ரத்தசோகை போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பிறப்பு எடை குறைவாகவும், முழுமையான கர்ப்ப காலத்தை கடந்து செல்ல இயலாத நிலையிலும் பிறக்கின்றனர்.
இதனால் ஊட்டச்சத்து விழிப்புணர்வு அளிப்பதன்மூலம் ரத்தசோகை பிறப்பு எடை குறைபாடு மற்றும் புரதச்சத்து குறைபாடு ஆகியவை குறைக்கப்படும். இரும்புச்சத்து நிறைந்த பச்சைக் காய்கறிகள் மற்றும் நாட்டுக் காய்கறிகளை வீட்டுத்தோட்டத்தின் வாயிலாக குறைந்த செலவில் உற்பத்தி செய்து பயன்படுத்தும்போது நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை நீக்கமுடியம். அதனால் அனைவரும் பசுமையான காய்கறி கீரை இவற்றை உண்பது அவசியம்.
எனவே ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த செலவில் கத்தரி, வெண்டை, பீன்ஸ், கொத்தவரை, சுரக்காய், பூசணி பரங்கி மற்றும் தக்காளி போன்ற காய்கறி கீரைகளை விளைவித்து குடும்பத்தினருக்கு அளிப்பதன் மூலம் அவர்களுக்கிடைக்ககு வேண்டிய ஊட்டச்சத்துகளைப் பெற முடியும்” எனத் தெரிவித்தார்
மேலும் தங்கள் வீடுகளிலும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சமுதாயத் தோட்டத்தை அமைத்து பயன்படுத்துவதன் மூலமும் அந்தப்பகுதி தாய்மார்களும் குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் வாழ ஏதுவாக இருக்கும் என்றும் எனவே சமுதாய பொறுப்புடன் ஒன்றிணைந்து பெரம்பலூர் மாவட்டத்தை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.