அதி தீவிர புயலாக வலுப்பெற்று, நாளை (நவம்பர் 25) கரையை கடக்கும் நிவர் புயல் காரணமாக, பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா இன்று (நவம்பர் 24) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, " வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக தீவிரமடைந்துள்ளதால் பெரம்பலூர் மாவட்டத்தில் கன மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புயல் நேரங்களில் மக்கள் சேவைக்காக தீயணைப்பு, மருத்துவம், உணவு பொருட்கள், அவசர கால ஊர்தி, மணல் மூட்டைகள், பாதுகாப்பு இயந்திரங்கள் ஆகியவை அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து துறை அலுவலர்களும் நிவர் புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளனர். புயல் குறித்து பரவும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் 1077 மற்றும் 18004254556 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு அவசரத் தேவை மற்றும் புகார்களை மாவட்ட மக்கள் தெரிவிக்கலாம்" என்றுக் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திபின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மக்களிடம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!