2006 முதல் 2011 வரை பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் எம் ராஜ்குமார். இவரது வீட்டில் பணியாற்ற கேரளாவைச் சேர்ந்த சந்திரன்-சுசிலா தம்பதியின் மகள் சத்யா(15) வரவழைக்கப்பட்டார்.
இந்நிலையில் சத்யாவின் உடல்நிலை மோசமானதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் சிறுமியின் பெற்றோரிடம் ராஜ்குமார் தகவல் தெரிவித்தார். அதன்பின், 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வெளியான உடற்கூறாய்வு அறிக்கையில், சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், அவரது நண்பர்கள் 6 பேர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன்பின், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் போலீசில் சரணடைந்தார், மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஜயசாந்தி குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மற்றொரு குற்றவாளியான ஜெய்சங்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 12 ஆயிரம் ரூபாயையும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மற்றவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கபடாததால், அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட தன் மகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டி, சத்யாவின் பெற்றோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.