அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 48 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மனதளவில் அவர்களைத் தயார் செய்வதற்கான ஊக்கமூட்டும் பயிற்சி அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இப்பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ரத்னா தொடங்கிவைத்து உரையாற்றினார். அவரது உரையில்:
- நீட் தேர்வை எழுதி முடித்துள்ள ஏழை மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
- மருத்துவம் மட்டுமே உயர்ந்த படிப்பு அல்ல; அதனைவிட வாழ்க்கையில் உயர பல படிப்புகள் உள்ளன.
- பல வேலைகள் உள்ளன, அதனை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனை நோக்கியும் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நம்பிக்கையூட்டும்விதமாகப் பேசினார். மேலும் பெற்றோர் தங்களது ஆசைகளை பிள்ளைகளின் மீது திணிக்கக்கூடாது என்று அறிவுறுத்திய அவர், பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து அதற்குப் பெற்றோர் உதவ வேண்டும் என யோசனை தெரிவித்தார்.
பின்னர் ஊக்கமூட்டும் பேச்சாளர்கள் மாணவர்களின் நம்பிக்கையை வளர்க்கும்விதத்தில் பேசினர். மன வலிமை குறித்து உளவியல் மருத்துவர்கள் மாணவரிடம் உரையாற்றினர்.
இதில், மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், வழிகாட்டுவோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.